அமெரிக்க பென்டகன் தலைவர் ஹெக்ஸெத் வெனிசுலாவுடன் இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்
கராகஸ்: அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், வெனிசுலாவுக்கு புதன்கிழமை பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸைச் சந்தித்தார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே புதிய இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வெனிசுலா அரசு ஊடகங்கள் இந்தச் சந்திப்பையும் ஒப்பந்த நிகழ்வையும் ஒளிபரப்பின. எனினும், ஹெக்ஸெத்தின் பயணம் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கப் படைகள் வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவைப் பதவியிலிருந்து அகற்றி, அவரது மனைவியுடன் நியூயார்க்கிற்கு அழைத்துச் சென்றதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மதுரோ போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸின் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
கராகஸில் நடைபெற்ற சந்திப்பின்போது பேசிய ரோட்ரிக்ஸ், புதிய ஒப்பந்தம் வெனிசுலா இராணுவத்தின் பயிற்சித் திறனை மேம்படுத்துவதுடன், நவீன தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கும் வழிவகுக்கும் என்றார். மேலும், இரு நாடுகளும் பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த ஒத்துழைப்பு உதவும் எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் பேசுகையில், இரு நாடுகளின் பாதுகாப்புக் கூட்டாண்மையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், இராணுவங்கள் இணைந்து செயல்படுவதற்கும் இந்த ஒப்பந்தம் புதிய வாய்ப்பை ஏற்படுத்தும் என்றார்.
கூட்டு இராணுவப் பயிற்சிகள், உளவுத் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
வெனிசுலா மக்கள் வெளிநாட்டுச் சக்திகள், போதைப்பொருள் பயங்கரவாதிகள் மற்றும் குற்றக் குழுக்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் ஹெக்ஸெத் தெரிவித்தார்.
மதுரோ ஆட்சியில் இருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. 2019ஆம் ஆண்டு டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவை இடைக்கால அதிபராக அமெரிக்கா அங்கீகரித்ததைத் தொடர்ந்து, மதுரோ அரசு அமெரிக்காவுடனான தூதரக உறவுகளைத் துண்டித்தது.
தற்போது ரோட்ரிக்ஸ் தலைமையிலான அரசுடன் அமெரிக்கா அரசியல், பொருளாதார மற்றும் எரிசக்தித் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக, வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியில் அமெரிக்கா முக்கிய பங்காற்றத் தொடங்கியுள்ளது. எண்ணெய் வருவாயைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளும் இரு நாடுகளின் ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக உள்ளன.
இதற்கிடையில், வெனிசுலாவில் ஜனநாயகத் தேர்தல்களை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ வலியுறுத்தி வருகிறார். மதுரோவின் பதவி நீக்கத்திற்குப் பின்னர் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதற்கான கால அட்டவணை இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

Post a Comment